ஐபிஎல் போட்டியில் காயத்தால் அவதி டோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: மும்பை மருத்துவமனையில் நடந்தது

மும்பை: ஐபிஎல் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட டோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மும்பை மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். தற்போது நடந்து முடிந்த 16வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால் போட்டியின் போதே டோனி காயத்துடன் தான் விளையாடினார். குறிப்பாக இடது முழங்காலில் கட்டுப்போட்டபடி அவர் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றிய கையோடு அவர் அகமதாபாத்தில் இருந்து நேரடியாக மும்பை சென்றார். அங்கு பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

இவர் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுக்கு அறுவை சிகிச்சை நடத்தியவர். அவர் டோனியை ஆய்வு செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தார். இதை ஏற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோனிக்கு நேற்று இடது முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்உறுதி செய்தார். அவர் கூறுகையில்,’ ஆமாம், டோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார். காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னிடம் மற்ற விவரங்கள் இல்லை. அவரது உடல் நிலை, அறுவை சிகிச்சை மற்றும் பிறவிஷயங்கள் குறித்த மற்ற அனைத்து விவரங்களையும் நான் இன்னும் பெறவில்லை’ என்றார்.

The post ஐபிஎல் போட்டியில் காயத்தால் அவதி டோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: மும்பை மருத்துவமனையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: