உழவு செய்ய இது உரிய தருணம் :கோடை மழையைப் பயன்படுத்துங்க!

கத்திரி வெயில் தொடங்கிவிட்டது. ஆனால் கடந்த வாரம் தமிழகத்தின் பல பகுதிகள் ஐப்பசி மாதத்தில் இருப்பதைப்போல உணர்ந்தன. எங்கும் நல்ல மழை. மழையில் பூமி நிச்சயம் குளிர்ந்திருக்கும். இந்த சமயத்தில் விவசாயிகள் தங்கள் வயலில் கோடை உழவை மேற்கொண்டு நல்ல பலன் அடையலாம். இதுவரை சுட்டெரித்த கோடை வெயிலால் நிலத்தின் மேல்மண் கடுமையாக வெப்பமடைந்திருக்கும். மழை பெய்த குளிர்ச்சியில் உழவு செய்யும்போது மண்ணில் இருந்த வெப்பத்தன்மை சற்று தணியும். மேல் மண்ணில் ஏற்படும் வெப்பத்தன்மை, நிலத்தடி நீரைக்கூட ஆவியாக்கும். இந்த சமயத்தில் உழவு செய்வது நிலத்தடி நீர்வளத்திற்கும் ஏற்றதாக இருக்கும். உழவு செய்யும்போது மண்ணில் உள்ள களைச்செடிகள் மேல் பகுதிக்கு வந்து சூரியச்சூட்டில் அழிய வாய்ப்பு ஏற்படும்.

மேலும் மண்ணில் உள்ள பல்வேறு தீமை செய்யும் கூட்டுப்புழுக்களின் முட்டைகளும் அழிந்து வயல் சுத்தமாகும். நோய்க்கிருமிகளும் அழிந்துபோகும். குறிப்பாக மக்காச்சோளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க பட்டைப்புழுக்களை அழித்து ஒழிக்கலாம். உழவு செய்யும்போது மேல்மண் கீழாகவும், கீழ்மண் மேலாகவும் சென்று மண்ணின் இறுக்கத்தன்மை குறையும். அப்போது ஏற்படும் இலகுத்தன்மையால் மண்ணில் காற்றோட்டம் நிகழும். இது மண்ணுக்கு புத்துணர்ச்சியை வழங்கி அடுத்த சாகுபடிக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.

உழவு செய்து தட்டைப்பயறு, கொழுஞ்சி, சணப்பை ஆகியவற்றை பயிரிட்டு நிலத்தில் பசுந்தாள் உரம் கிடைக்கச் செய்யலாம். அவற்றை ஒரு எக்டேருக்கு 12ல் இருந்து 15 கிலோ என்ற அளவில் பயிரிட்டு மடக்கி உழுதால் மண் வளம் மிக்கதாக மாறும். ஆனி முடிந்து ஆடிப்பட்டம் விதைக்கும்போது மண் இன்னும் சத்து மிக்கதாக மேம்பட்டிருக்கும். நெல், கரும்பு, காய்கறி என எந்த பயிரை சாகுபடி செய்தாலும், செழிப்பான விளைச்சல் கிடைக்கும். இத்தகைய பல பலன்களைக் கொடுக்கும் கோடை உழவை இப்போது செய்தால் சரியாகத்தானே இருக்கும்!

 

The post உழவு செய்ய இது உரிய தருணம் :கோடை மழையைப் பயன்படுத்துங்க! appeared first on Dinakaran.

Related Stories: