கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சும் செயலும் நல்ல விளைவுகளை உருவாக்காது : முத்தரசன்

பெங்களூரு : கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சும் செயலும் நல்ல விளைவுகளை உருவாக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் ஆட்சியாக இருந்த பாஜக அரசை அகற்றி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருப்பதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக இடதுசாரி சக்திகள் வரவேற்றுள்ளன. கர்நாடக மாநில மக்களின் தீர்ப்பு ஒன்றிய அரசிலும் மாற்றத்தை உருவாக்க முனைந்துள்ள ஜனநாயக, இடதுசாரி, மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில அரசின் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான திரு டி.கே.சிவகுமார் “மேகதாது அணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டிருப்பது” எதிர்மறை போக்குக்களை உருவாக்கும் செயலாகும்.

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக 1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உருவாக்கிய குறுகிய கண்ணோட்டத்தாலும், அம்மாநில அரசின் பிடிவாதத்தாலும் நீண்ட கால தாமத்திற்கு பின்னால் 1990 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பகிர்வு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் நீண்ட காலம் விசாரித்து 2007 ஆம் ஆண்டுஇறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன் மீதான மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து காவிரி நதிநீர் பகிர்வு மீது இறுதித் தீர்ப்பு வழங்கியது.

நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு உள்ளிட்ட கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் எந்தவிதக் கட்டுமானங்களும் ஏற்படுத்தக் கூடாது என தெளிவுபடக் கூறியுள்ளன. ஒற்றிய அரசின் நீர்வளத்துறையும் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சும் செயலும் நல்ல விளைவுகளை உருவாக்காது. அவரது பொறுப்பற்ற பேச்சுக்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சும் செயலும் நல்ல விளைவுகளை உருவாக்காது : முத்தரசன் appeared first on Dinakaran.

Related Stories: