கோவையில் திருமணமாகி 20 நாட்களில் இளம்பெண் கொலை: குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை நாடகமாடிய கணவன் உட்பட 3 பேர் கைது

கோவை: கோவையில் திருமணமாகி 20 நாட்களே ஆன இளம்பெண் கொலை செய்யப்பட்டார். காதல் மனைவியை கொலை செய்த கணவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள மத்துவராயபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது 20 வயது மகன் சஞ்சய், பேரூர் பகுதியில் உள்ள தமிழ்க் கல்லூரியில் பி.காம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படித்து வந்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரமணி என்ற 20 வயது பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த மே மாதம் 6 ம் தேதி வேளாங்கண்ணியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 29 ம் தேதியன்று ரமணி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஆலாந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, ரமணி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ரமணி கணவன் சஞ்சய், அவரது தந்தை லட்சுமணன், அம்மா பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மூவரும் முன்னுக்குபின் முரணான பதில் அளித்ததால் காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன் பேசிக் கொண்டிருப்பது இருந்துள்ளார். இது ரமணிக்கு பிடிக்காததால், அப்பெண்ணுடன் செல்போனில் பேச வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ம் தேதியன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் சஞ்சய் ரமணியை அடித்து கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். மேலும் கீழே தள்ளி துப்பட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சஞ்சய் ரமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதன் பேரில் ஆலாந்துறை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி சஞ்சய், பக்ரூ நிஷா மற்றும் லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இளம்பெண்ணை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவையில் திருமணமாகி 20 நாட்களில் இளம்பெண் கொலை: குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை நாடகமாடிய கணவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: