கலெக்டரின் காரை திடீரென வழிமறித்த வாலிபர் வேலூரில் பரபரப்பு கையில் ஸ்பேனருடன் பைக்கில் வந்து

வேலூர், ஜூன் 1: வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் காரை, கையில் ஸ்பேனருடன் பைக்கில் வந்து திடீரென வழிமறித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்துக்கு நேற்று தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் வந்தார். அவருடன் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி 44வது வார்டு தூய்மை பணியாளர் குடியிருப்புகளை ஆய்வு செய்வதற்கு சென்றார். தொடர்ந்து அங்கிருந்து அவர் காரில் கலெக்டர் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தார். மக்கான் வழியாக பழைய பைபாஸ் சாலையில் சென்று திரும்பும்போது மீன் மார்க்கெட் அருகில் அவரது காரை பைக்கில் வந்த வாலிபர் திடீரென வழிமறித்து நின்றார். அதில் இருந்து கையில் ஸ்பேனருடன் இறங்கிய வாலிபர் கலெக்டரிடம், ‘எனது தெருவில் சாக்கடை தெருவிலேயே ஓடுகிறது’ என்று புகார் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ‘இதுபோல் சாலையில் காரை மறிக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தியதுடன், வடக்கு போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அதேபகுதியில் மெக்கானிக் ஷெட் வைத்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து, தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசனை வழியனுப்பினார். அப்போது கலெக்டரின் காரை மறித்த வாலிபரின் உறவினர்கள் திரண்டு வந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அவரை மன்னித்து விட்டுவிட கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த வாலிபரை வடக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அழைத்து வந்தனர். அந்த வாலிபரை கலெக்டர் எச்சரித்து அனுப்பி வைத்தார். கலெக்டரின் காரை பைக்கில் வந்த வாலிபர் வழிமறித்த சம்பவத்தால் வேலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post கலெக்டரின் காரை திடீரென வழிமறித்த வாலிபர் வேலூரில் பரபரப்பு கையில் ஸ்பேனருடன் பைக்கில் வந்து appeared first on Dinakaran.

Related Stories: