வேலூர், ஜூன் 1: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் வேலூரில் ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி செல்லும் வாகனத்தின் எடையை சரிபார்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை சிலர் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தி விற்கின்றனர். இதனை வருவாய்த்துறையினர், உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து தடுத்து வருகின்றனர். அதேபோல் அரிசி கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்கின்றனர். இந்நிலையில் சிவில் சப்ளை குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு செல்லும் அரிசியின் எடை சரியாக உள்ளதா? என திடீர் சோதனை நடத்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று வேலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஎஸ்பி நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வனிதா, வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா ஆகியோர் இணைந்து வேலூர் அண்ணா சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றிக்கொண்டு மினிலோடு வேன் வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்தி அதன் எடையை சோதனை செய்ய மக்கான் பகுதியில் உள்ள தனியார் மின்னணு எடை பார்க்கும் மையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் எடையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் இனி, ரேஷன் அரிசி ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி எடை சரிபார்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ரேஷன் அரிசி ஏற்றி செல்லும் வாகனத்தின் எடை சரிபார்ப்பு வேலூரில் அதிகாரிகள் நடவடிக்கை கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.