வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 1: குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமீறிய 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா, குழந்தை தொழிலாளர் பணியில் உள்ளார்களா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் 26 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5 நிறுவனங்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதில், முரண்பாடு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி 5 நிறுவனங்கள் மீதும் கேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் வழங்காதது, கொத்தடிமை முறை ஒழிப்புக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். பணியில் ஈடுபடுத்துவது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டு நிறுவன உரிமையாளருக்கு ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரையும், அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இதேபோல் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு இருப்பதை, பொதுமக்களுக்கு தெரியவந்தால், 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தெரிவித்துள்ளார்.

The post வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: