உலகிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.1 லட்சம் கோடியில் உணவு தானிய சேமிப்பு குடோன்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்டுறவு துறையில் உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திறனை உருவாக்க ரூ.1 லட்சம் கோடியில் புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவு துறையில், உலகிலேயே மிகப்பெரிய அளவில் உணவு தானிய சேமிப்பு திறனை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய திட்டத்தை தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 700 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு திறனை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும், 2000 டன் கொள்ளவு கொண்ட கிடங்குகள் அமைக்கப்படும்.

தற்போது நாட்டின் உணவு தானிய உற்பத்தி சுமார் 3,100 லட்சம் டன்னாக உள்ளது. இதில் 47 சதவீதத்தை மட்டுமே சேமிக்கக் கூடிய திறன் நம்மிடம் உள்ளது. அதாவது, 1,450 லட்சம் டன் உணவு தானியங்களை மட்டுமே சேமிக்கும் திறன் உள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் புதிதாக 700 லட்சம் டன் சேமிப்பு திறன் உருவாக்கப்படுவதால் நாட்டின் மொத்த சேமிப்பு திறன் 2,150 லட்சம் டன்னாக உயரும். சோதனை முயற்சியாக 10 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* யூனிவர்சல் போஸ்டல் யூனியன் எனப்படும் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் அலுவலகத்தை டெல்லியில் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* அடுத்த 5 ஆண்டுகள் நகரங்களை புதுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து, முதலீடுகளை ஈர்க்க சிட்டீஸ் 2.0 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post உலகிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.1 லட்சம் கோடியில் உணவு தானிய சேமிப்பு குடோன்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: