பாலியல் புகார் வழக்கில் பா.ஜ எம்பியை கைது செய்ய ஆதாரம் கிடைக்கவில்லை: டெல்லி காவல் துறை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கான போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர். பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், அவர் கைது செய்யப்படவில்லை.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக அறிவித்தனர். அவர்களை விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகத் உள்ளிட்டோர் தடுத்து சமாதனப்படுத்தினர். இருப்பினும், ‘அடுத்த 5 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிச்சயமாக பதக்கங்களை கங்கையில் விசுவோம்,’ என்று உறுதி எடுத்து விட்டு வீரர்கள் திரும்பினர். இந்நிலையில் பாலியல் வழக்குகளில் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று, ‘இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு போதுமான ஆதாரம், போலீசார் நடத்திய விசாரணையில் கிடைக்கவில்லை. இந்த வழக்கு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை 15 நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். அது குற்றப் பத்திரிகையாகவோ அல்லது இறுதி அறிக்கையாகவோ இருக்கலாம்,’ என்று தெரிவித்தார். இதன் மூலம், இந்த வழக்கில் பிரிஜ் பூஷனை போலீசார் கைது செய்ய வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டம் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் இந்த தகவல், மல்யுத்த வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் இந்த அறிக்கைக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘ஆதாரம் கொடுத்தால் தூக்கில் தொங்குவேன்’
பிரிஜ் பூஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்குவேன். உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். எந்த தண்டனையாக இருந்தாலும் அதனை ஏற்க தயாராக இருக்கிறேன்,’ என்று தெரிவித்தார்.

ஒன்றிய பெண் அமைச்சர் ஓட்டம்
டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லெகி கலந்து கொண்டார். அவரிடம் மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

The post பாலியல் புகார் வழக்கில் பா.ஜ எம்பியை கைது செய்ய ஆதாரம் கிடைக்கவில்லை: டெல்லி காவல் துறை பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: