கர்நாடக தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுமா?: நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 2,000 நிதியுதவி, மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், அன்னபாக்யா திட்டத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, அரசு போக்குவரத்து பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவி தொகை என ஐந்து திட்டங்கள் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் 24 மணி நேரத்தில் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கொடுத்த உறுதி ஏன் காப்பாற்றவில்லை என்ற கேள்வியை பாஜ, மஜத கட்சிகள் எழுப்பி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அறிவித்த ஐந்து வாக்குறுதிகள் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து நேற்று காலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து வாக்குறுதிகளை அமல்படுத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கர்நாடக தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுமா?: நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: