மீண்டும் மன்னர் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறார்: பிரதமர் மோடி மீது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மன்னராட்சி அகற்றப்பட்ட போது செங்கோலும் ஒழிக்கப்பட்டு விட்டது, மீண்டும் மன்னராட்சியை கொண்டு வர பிரதமர் மோடி விரும்புகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார். தேசிய சிந்தனையாளர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோபண்ணா தலைமையில், ‘இந்தியாவில் 1947 ஆகஸ்ட் 15ல் நடந்தது என்ன? உண்மையை உரக்க சொல்வோம்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் ஒன்றை நிறுவியுள்ளார். இந்த செங்கோல் என்பது நாட்டிற்கு பெருமைக்குரிய விஷயம் அல்ல. நாட்டில் மன்னராட்சியை நீக்கிவிட்டு, மக்கள் ஆட்சி மலர்ந்த போது செங்கோலும் வீழ்த்தப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். செங்கோலும் ஒழிக்கப்பட்டது. மன்னர் கையில் இருந்த செங்கோல் என்பது மாசு, மறுவற்ற செங்கோல் அல்ல. மனித குல வரலாற்றில் மாபெரும் புரட்சியின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்தது. தற்போது மீண்டும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி விரும்புகிறார். அதன் அடையாளம் தான் இந்த செங்கோல். மோடி நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவிய செங்கோல் ஒன்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வைத்திருந்த செங்கோல் அல்ல. ஒரு நகைக்கடையில் செய்யப்பட்டது. அந்த கடைக்கு தான் பெருமை. தமிழ்நாட்டுக்கு அல்ல. பிரதமர் மோடி செய்த இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மீண்டும் மன்னர் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறார்: பிரதமர் மோடி மீது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: