மணிப்பூரில் அமைதியை மீட்க குக்கி பழங்குடி மக்களை சந்தித்து அமித்ஷா பேச்சு

இம்பால்: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, எல்லையில் அமைந்துள்ள மோரே பகுதிக்கு சென்ற அமித்ஷா, குக்கி பழங்குடியின தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூரில் பெரும்பான்மை பிரிவான மெய்டீஸ் இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் பழங்குடி மக்களான நாகா, குக்கி சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

இதில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அமைதியை மீட்டெடுக்க 4 நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றுள்ளார். இரு பிரிவினர் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பல்வேறு அமைப்பினரை அமித்ஷா சந்தித்து பேசுகிறார். அந்த வகையில், இந்தியா-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மோரே கிராமத்திற்கு நேற்று சென்ற அமித்ஷா அங்கு குக்கி மற்றும் பிற சமூக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அமித்ஷா ஆய்வு செய்தார்.

அப்போது, மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தருவதாக குக்கி தலைவர்கள் உறுதி அளித்ததாக அமித்ஷா கூறி உள்ளார். மாலையில் அவர் அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தினார். மணிப்பூரின் அமைதி மற்றும் செழுமையே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று கூறி உள்ள அமித்ஷா, அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் கடுமையாக கையாளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஆயுதங்களை ஒப்படையுங்கள்
மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் நேற்று விடுத்த அறிக்கையில், ‘மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தடை உத்தரவை மீறி மக்கள் சாலைகளை முடக்கி உள்ளனர். இதனால் பாதுகாப்பு படையினர் பணி மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாநிலத்தில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுக்க மக்கள் யாரும் சாலைகளை முடக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அதே போல, பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள், தோட்டாக்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறி உள்ளார்.

The post மணிப்பூரில் அமைதியை மீட்க குக்கி பழங்குடி மக்களை சந்தித்து அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: