டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மதவழிபாட்டு தலத்திற்கு சென்ற பேருந்து பாளத்தின் தடுப்பு மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 57 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் இந்துக்களின் புனித வழிபாட்டு தலமான மாதா வைஷ்னவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பீகாரில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் ஒரு ஆம்னி பேருந்தில் மாதா வைஷ்னவி கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த பேருந்து ஜம்முவின் ஹஜர் கொட்டில் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ஒருகட்டத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து பாலத்தின் தடுப்பின் மீது மோதி கீழே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. அதில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பக்தர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.”
The post ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.