ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கில் போடுங்கள்: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் பேச்சு

டெல்லி: என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள தயார் என்று, பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், மைனர் பெண் உட்பட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, பிரிஜ் பூஷணை கைது செய்யக் கோரி, ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி தடையை மீறி பேரணி சென்றனர். ஆனால், அவர்களை டெல்லி போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி நடுரோட்டிலேயே தரதரவென இழுத்து சென்ற விவகாரம் தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதோடு, ஜந்தர் மந்தரில் போராட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டு, அங்கு போராட அனுமதியும் மறுக்கப்பட்டது. இது குறித்து டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங்; என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கத் தயார். மல்யுத்த வீரர்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும், எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என கூறினார். இதனிடையே பிரிஜ் பூஷன் சிங்கைக் கைது செய்ய போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. விசாரணை முடிவடைந்து விசாரணை அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகை, அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

The post ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கில் போடுங்கள்: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: