மலைப்பாதையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வரும் வாகனங்களுக்கு தடை, அபராதம்: திருப்பதி-திருமலையில் நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு அதிவேகம் மற்றும் அலட்சியமே காரணம் என்று புகார் எழுந்தது. இதை தடுக்க திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நேற்று ஆலோசனை நடத்தினர். பிறகு கூடுதல் எஸ்பி முனிராமய்யா நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி மலைப்பாதையில் தினமும் அரசு பஸ்கள், இருசக்கர வாகனங்கள், கார் உள்பட சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதை 17 கிமீ இருந்தாலும் 63 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

2வது மலைப்பாதை எனப்படும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை சாலை 18 கிமீ இருந்தாலும் 6 வளைவுகள் மட்டுமே உள்ளது. இந்த பாதையில் விழிப்புணர்வு இல்லாமலும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுவதால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மலைப்பாதையில் செல்வதற்கான 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கக்கூடிய வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். வாகனத்தில் இருக்கை எண்ணிக்கை மிகாமல் பயணிகள் இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள், தங்கள் வாகன ஓட்டிகளுக்கு போதிய அளவு ஓய்வு தரவேண்டும். மலைப்பாதையில் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர நடைமுறையில் இருந்த வேகக்கட்டுப்பாடு மீண்டும் நாளை முதல் (இன்று) அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 28 நிமிடங்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 40 நிமிடங்களும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, மீண்டும் மலைப்பாதையில் செல்லாத வகையில் தடை விதிக்கப்பட உள்ளது. இதற்காக அலிபிரி சோதனைச்சாவடியில் வழங்கப்படும் சுங்கவரி ரசீதில் நேரம் குறிப்பிடப்படும். அதில் இருந்து திருமலைக்கு ஜிஎன்சி சோதனைச்சாவடி அருகே வாகனங்கள் வரும்போது, அந்த சுங்க கட்டண ரசீது ஸ்கேன் செய்யப்படும். அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த வாகனங்கள் மலைக்கு மீண்டும் செல்ல தடை விதிக்கப்படும். மேலும் மலைப்பாதையில் எந்த வாகனமும் முந்தி செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மலைப்பாதையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வரும் வாகனங்களுக்கு தடை, அபராதம்: திருப்பதி-திருமலையில் நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: