மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

நமக்கான உணவை நாமே தயார் செய்வோம் என இன்று பலர் தற்சார்பு வாழ்க்கை முறைக்கு வந்துவிட்டார்கள். அதன் முதல்படிதான் மாடித்தோட்ட விவசாயம். சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் முதல் சிறு நகரங்கள், கிராமங்கள் என பல பகுதிகளிலும் மாடித்தோட்டத்தின் மகிமை தெரிய ஆரம்பித்துவிட்டது. நமது உணவை நாமே தயார் செய்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அதை ரசாயனம் கலக்காமல் இயற்கையான முறையிலும் உருவாக்கலாம் என்ற எண்ணத்தில்தான் மாடித்தோட்டங்கள் சக்சஸ் ஆகிவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், மடுவன்கரை பகுதியில் வசிக்கும் உஷா என்பவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் 900 சதுரஅடியில் மாடித்தோட்டத்தை அசத்தலாக அமைத்துள்ளார். இதன்மூலம் தனக்குத் தேவையான காய்கறிகள், மருத்துவக்குணம் மிக்க செடி வகைகள், பூச்செடிகள் என அனைத்தையும் இயற்கை முறையில் விளைவித்து மகசூல் எடுத்து வருகிறார். தனது மாடித்தோட்டத்தில் மலர்ந்திருக்கும் காய்கறிச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் உஷாவை சந்தித்தோம்..
.
“கல்பாக்கம் அருகில் உள்ள எடையூர் தான் எங்கள் சொந்த ஊர். அப்பா வேலாயுதம் இலங்கையில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பால் எடுக்கும் பணியை செய்து வந்தார். இதனால் நாங்களும் இலங்கைக்கு அவருடன் சென்றுவிட்டோம். எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊரைப்போல் வராது என சொல்வார்கள். இலங்கையில் வசித்தாலும் எங்கள் எண்ணம் தமிழ்நாட்டைச் சுற்றியே இருந்தது. இதனால் 1970ல் இந்தியா வருவதற்கான ஏற்பாட்டில் இறங்கினோம். அடுத்த வருசமே சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். இலங்கையில் இருந்து சொந்த ஊர் திரும்பியதால் எங்களுக்கு பல்லாவரத்தில் அரசு சார்பில் சொந்தமாக இடம் கொடுத்தார்கள். அங்கேயே வீடு கட்டி குடியிருந்தோம். அப்பாவுக்கு தையல்தான் முக்கியத் தொழிலாக இருந்தது. அதைவிட செடி, கொடிகள் வளர்ப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. வீட்டிற்கு அருகில் இருந்த இடங்களில் நந்தியாவட்டம், குண்டுமல்லி, செம்பருத்தி போன்ற பல பூச்செடிகளை வளர்த்து வந்தார். அதைப்பார்க்கும்போது எனக்கும் தோட்டம் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இடப்பற்றாக்குறை இருந்ததால் மாடியில் பொழுதுபோக்கிற்காக செடிகளை வளர்க்க தொடங்கினேன்” என புன்னகைத்தவாறு பேசத்தொடங்கினார் உஷா.

“சேலம் மாவட்டம் தாரமங்கலம், பவளத்தானூர் பகுதிகளில் உள்ள ஈழ அகதிகள் முகாமுக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். அங்கு கிடைக்கும் கத்திரி, வெண்டை, குடைமிளகாய் போன்ற செடிகளை எடுத்து வந்து வளர்க்கத் துவங்கினேன். திருமண நிகழ்விற்கு செல்லும்போது அங்கு கொடுக்கும் விதைகள், செடிகளையும் வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். செடிகள் நடவு, பாதுகாப்பு குறித்து அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். கத்திரியைப் பொருத்தவரையில், விதைகளை இரவே ஊறவைத்து, தொட்டியில் ஊன்றுவோம். விதைப்பதற்கான தொட்டியில் 30 சதவீதம் மண், 20 சதவீதம் உரம், 20 சதவீதம் கோகோபீட், 20 சதவீதம் மணல் மற்றும் 10 சதவீதம் வேப்பம்புண்ணாக்குத் தூள் சேர்த்து மண் கலவையை தயார் செய்து அதில் விதைப்போம். கன்றுகள் வளர்ந்து 5-6 அங்குல உயரத்தை அடைந்தவுடன், அவற்றை புதிய தொட்டிகளில் இடமாற்றம் செய்வோம். தக்காளி, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற துணைத் தாவரங்களுடன் இதனை வளர்க்கலாம். செடி பூக்க ஆரம்பித்த பிறகு, தினமும் கொடுக்கப்படும் நீரின் அளவைக் குறைக்கலாம். செடிகளில் மகரந்தச் சேர்க்கையைத் தூண்ட பூக்களை மடித்து மெதுவாக தேய்க்கலாம். ஊட்டச்சத்துக்காக, வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி உரம், வாழைத்தோல், ஜீவாமிர்தம், முட்டை ஓடுகள், பஞ்சகவ்யா ஆகியவற்றைச் சேர்ப்போம்.

உருளைக்கிழங்கு மிகவும் எளிதாக பயிரிடக்கூடிய காய்கறிகளில் ஒன்று. அதாவது 10×12 அங்குல ஆழம் கொண்ட ஒரு தொட்டியில் நாம் எளிதாக 3 முதல் 4 உருளைக்கிழங்குகளை நடலாம். உருளைக்கிழங்குக்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். இதனால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு வசதியாக பிளாஸ்டிக் தொட்டிகளைப் பயன்படுத்துவது நல்லது. உருளைக்கிழங்குச் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து, விரைவில் பலன் தர போதுமான அளவு தண்ணீர் விடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், அவற்றின் தண்டுகள் முழுமையாக மண்ணால் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த முறையில் நடவு செய்வதன் மூலம் உருளைக்கிழங்கு ஓரிரு மாதங்களில் செழித்து வளர்ந்து பலன்தரும்.

முருங்கையில் செடி முருங்கையை டிரம் மூலம் வளர்க்கலாம். இதற்கு டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் சிறிது தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைப்போம். 10 நாட்களுக்குப் பிறகு அதில் நடவு செய்வோம். மேலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளிப்போம். அதிக கிளைகள் வளராதவாறு கவாத்து செய்து நல்ல திடகாத்திரமான நான்கு கிளைகளை மட்டும் வளர அனுமதிப்போம். எங்களது மாடித்தோட்டத்தில் வாழைமரம், ட்ராகன் ப்ரூட், பப்பாளி, சீதா, கொய்யா போன்ற பழ மரங்களையும் வைத்திருக்கிறோம். அதேபோல் கபத்தை வெளியேற்றும் மூலிகைகள் பலவும் வைத்துள்ளோம். அவற்றில் முக்கியமானவை என்று பார்த்தால் கற்பூரவல்லி, நொச்சி, தூதுவளை, திருநீற்றுப்பச்சிலை, கண்டங்கத்திரி, தும்பை, துளசி போன்ற மூலிகை செடிகளையும் வைத்து வளர்த்து வருகிறோம். இவை சளி, இருமல், கப காய்ச்சலை விரட்டி அடிக்க உதவும். இவை அனைத்தையுமே தொட்டியில் வளர்த்து வருகிறோம். வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் போக, மீதமுள்ளதை அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து விடுவோம்.

வாழை மரத்தைப் பொருத்தவரை அதிக எடை கொண்டதாக இருக்கும். இதனால் அதை யாரும் தங்களது மாடித்தோட்டத்தில் நடவு செய்யமாட்டார்கள். ஆனால், வாழையையும் எங்களது மாடித்தோட்டத்தில் நாங்கள் சாத்தியப்படுத்தியுள்ளோம். வாழைக்கன்றை நடவு செய்வதற்கு முன்பு, தொட்டிகளை சிறு கற்களை நிரப்பி அதன் மீது வைக்க வேண்டும். தொட்டியில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றைக் கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் கன்று வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். கன்றுகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் தேவைப்படுகிறதா? என்பதை ஒரு குச்சியை எடுத்து மண்ணில் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் மண் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டிருப்பதால் நல்ல மகசூல் கிடைக்க உதவிபுரியும். இந்த நடவு முறை மூலம் வாழையில் இதுவரை இரண்டு அறுவடை செய்திருக்கிறேன்” என்கிறார்.

The post மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: