தமிழகத்திலும் செழிக்கும் கோதுமை விவசாயம்

விபரம் தரும் வேளாண் அதிகாரி

மளிகைக்கடை, ஷாப்பிங் மால், சூப்பர் ஸ்டோர் என எங்கு பார்த்தாலும் கோதுமைப் பொருட்களின் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. தமிழக மக்களின் முக்கிய உணவாகவே கோதுமை மாறிவிட்டது. சப்பாத்தி, தோசை என நேரடி உணவாக மட்டுமில்லாமல், பிஸ்கட், அல்வா, பாஸ்தா, சேமியா என கோதுமையின் ஆதிக்கம் கோலோச்சுகிறது. மாறிவரும் உணவுப்பழக்கம், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாதது என பல காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி வளர்ந்துகொண்டே போவதுதான் இதற்கு காரணம். இதனால் தமிழகத்தில் கோதுமை வயல்கள் கூடுதலானால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஆம் அது சாத்தியம்தான் என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உழவியல் துறையின் முன்னாள் இயக்குனர் பன்னீர்செல்வம். வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்து கோவையில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமவெளி நிலத்தில் கோதுமை சாகுபடி செய்து நல்ல மகசூல் ஈட்டி தனது கருத்தை நிரூபித்தும் வருகிறார். அது எப்படி சாத்தியம்? கோதுமை விளைவிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என விளக்குகிறார் பன்னீர்செல்வம்.

“கோதுமை சாகுபடி தமிழகத்திற்கு பழக்கப்பட்டதுதான். 80 ஆண்டுகளாக தமிழகத்தில் கோதுமை சாகுபடி செய்து வருகிறோம். ஆனால், அதிக பரப்பளவில் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் நல்ல மகசூல் தரக்கூடிய ரகங்கள் கிடைக்காததுதான். கோதுமை சாகுபடி செய்வதற்கான இயந்திரங்களும் கிடைக்கவில்லை. விதைநெல் வாங்குவது, மகசூலை எங்கு விற்பது? போன்ற குழப்பமெல்லாம் இருந்தது. அதற்கு தீர்வு காணும் நோக்கில் சமவெளியில் கோதுமையை விளைவித்து, விவசாயிகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்க நாங்களே களத்தில் குதித்துவிட்டோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கோதுமை ஆராய்ச்சி நிலையம் இணைந்து கோதுமையை சமவெளியில் விளைவித்தோம். தமிழக அளவில் விவசாயிகளை அழைத்து கோதுமை சாகுபடி குறித்து பயிற்சி அளித்து, அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தோம். தமிழக விவசாயிகள், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் விளைவித்த கோதுமையை அறுவடை செய்தோம். இவ்வாறு விளைவிக்கும் கோதுமையை வாங்க, விற்க தேவையான ஒப்பந்தங்களும் அங்கேயே நடந்தது. விவசாயிகளின் நேரடி பார்வையில் மகசூல் எடுத்ததால் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

கோதுமைக்கான பருவமும், பராமரிப்பு முறையும்:

கோதுமை ஒரு குளிர்காலப்பயிர். காலம் காலமாகவே கோதுமை விவசாயத்தில் முன்னோடியாக இருந்தது நாம்தான். அதன் விளைச்சல் குறைவானதாலும், நல்ல ரகங்கள் கிடைக்காததாலும் கோதுமைக்கு மாற்றுப்பயிராக சோளம், கொண்டைக் கடலை ஆகியவை வந்ததாலும் கோதுமை விவசாயத்தை கைவிட்டோம். ஆனால், கோதுமையைப் பயிரிடுவது மிக அவசியத் தேவையாக இருக்கிறது. தமிழகத்தில் கோதுமைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது பெரும்பாலும் வெளியில் இருந்துதான் வருகிறது. இதனால் நாமே இதை விளைவித்து நல்ல லாபம் பார்க்கலாம். கோதுமை பருவப்பயிராக இருந்தாலும் அதனைப் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும். கோதுமை நடவு செய்ய ஏற்ற பருவம் சம்பா பருவம்தான். அதாவது நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருக்கும் குளிர்காலம் தான் கோதுமை சாகுபடிக்கு ஏற்றது. அப்போதுதான் பகலிலும், இரவிலும் நிலவும் வெப்பநிலை தோதாக இருக்கும். அதுவும் சமவெளியில் கோதுமை விவசாயம் செய்ய வேண்டுமென்றால் சம்பா பருவம் தான் சாத்தியம். பொதுவாகவே தமிழகத்தில் மலைப்பிரதேசங்களில் எல்லா பருவத்திலுமே கோதுமை விளைச்சல் நடைபெறுகிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கிற குளிரும், வெப்பமும் சரிக்குச்சரி இருப்பதால் தான். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளாக விளங்கும் அனைத்து ஊர்களிலும் கோதுமையைப் பயிரிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி போன்ற மாவட்டங்களில் கோதுமையைப் பயிரிடலாம்.

இதன் சாகுபடி முறை மிகவும் எளிமையானது. ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்குத் தேவையான நீரை வைத்தே மூன்று ஏக்கரில் கோதுமை சாகுபடி செய்யலாம். இன்னும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மானாவாரி பயிராகவும் கோதுமையை பயிரிடுகிறார்கள். இப்போது ஊட்டி கோதுமை ஆராய்ச்சி நிறுவனம் HW1098 என்கிற புதிய ரக கோதுமையை வெளியிட்டு இருக்கு. அதுதான் நமது சமவெளியில் பயிரிடக் கூடிய சம்பா கோதுமை. சம்பா பருவத்தில் இது பயிரிடுவதால் தான் இதன் பெயர் கூட சம்பா என்றே வைக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை மகசூல் தரக்கூடியது. பொதுவாகவே கோதுமையில் மூன்று ரகங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ரொட்டிக் கோதுமை, சப்பாத்திக் கோதுமை, ரவை கோதுமை (சம்பா கோதுமை). சம்பா கோதுமைதான் இப்போது பெருமளவு விற்பனையும் ஆகுது. அதே நேரத்தில் அதிக விலைக்கும் போகுது. சம்பா கோதுமையில் விதையும், விளைச்சலும் குறைவாகவே இருக்கும். தோல் நீக்கப்படாத சம்பா கோதுமையை ஒரு கிலோ ரூ.45க்கு விதைத் தேவைக்காகவே வாஷிங்டன் கோதுமை ஆராய்ச்சி நிலையத்தில் வாங்கிக்கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், கோவையில் இருக்கிற சம்பா ரவை, சம்பா அல்வா செய்யக்கூடிய நிறுவனங்களும் ரூ.55ல் இருந்து ரூ.75 வரை கோதுமையை நேரடியாகவே வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் விளைச்சலைச் சந்தைப்படுத்தும் முறையும் எளிதாக இருக்கிறது.

எப்போது சாகுபடி செய்யலாம்?

இந்த விதையை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இருந்து நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் விதைக்க வேண்டும். அந்த நேரத்தில் விதைத்தால் தான் இரவுநேர வெப்பநிலையும், பகல்நேர வெப்பநிலையும் குறைவாக இருக்கும். அப்போது தான் கோதுமைப்பயிர் வெப்பத்தைத் தாங்கி வளரும். அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரிக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும். சம்பா கோதுமை விவசாயம் செய்ய ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு 40 கிலோ விதைகள் வரை தேவைப்படும். விதைப்பதற்கு முன்பாக நிலத்தை நன்றாக உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுவுரம் தேவைப்படும். மண்ணை கடைசியாக உழும்போது இந்த தொழுவுரத்தைப் போட்டு உழ வேண்டும். பிறகு விதைக்க ஆரம்பிக்கலாம். வரிசைமுறை விதைப்புதான் சிறந்தது. 22 செ.மீ இடைவெளியில் வரிசையாக விதைக்க ஆரம்பிக்கலாம். விதைத்த பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின், இரண்டு வாரம் கழித்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு பூப்பூக்கும் தருணம், பால்விடும் தருணம் என நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு 40 கிலோ தழைச்சத்து தேவைப் படும். மணிச்சத்து 24 கிலோ தேவை. சாம்பல் சத்து 16 கிலோ. இதில் சாம்பல் சத்தையும், மணிச்சத்தையும் அடி உரமாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் விளைச்சல் தரும். கோதுமையில் பூச்சித் தாக்குதல் மிகமிகக் குறைவு. மழை இல்லாத காலத்திலும், நிலத்தடி நீர் குறைவான காலத்திலும் விளைவிக்கக் கூடிய இந்த சம்பா கோதுமை அதிக மகசூல் தரக்கூடியதாகவும், நன்றாக விற்பனையாகக் கூடியதாகவும் இருக்கிறது. அதனால் விவசாயிகள் கோதுமை சாகு படியில் தாராளமாக இறங்கலாம்” என விவசாயிகளுக்கு தெம்பூட்டுகிறார்.

The post தமிழகத்திலும் செழிக்கும் கோதுமை விவசாயம் appeared first on Dinakaran.

Related Stories: