ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை கடற்கரை-சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ரத்து: ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4வது பாதை அமைக்கும் திட்டத்திற்காக, ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானதாகும். இந்த தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு பாதையில் மட்டும் விரைவு ரயில்கள் அல்லது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலை உள்ளது. இதுதவிர, வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இங்கு கூட்டத்தை குறைக்கும் நோக்கில், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை அவசியமாகிறது. எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4வது புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. மேலும், ₹300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து புதிய பாதைக்கு மண் பரிசோதனை முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ₹96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டை விட தற்போது நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதால், இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கூவம் ஆறு பகுதியில் ரயில் பாதை அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். மேலும், இத்திட்டத்தை நிறைவேற்ற பாதுகாப்புத் துறை, ரிசர்வ் வங்கியிடம் நிலத்தைப்பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில், பாதுகாப்புத் துறையுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த 4வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்க கோரிக்கை
புதிய ரயில் வழித்தட பணிக்காக சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை மின்சார ரயில்கள், ஜூலை 1ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், வேளச்சேரி மார்க்கத்தில் இருந்து சேப்பாக்கம் வரை ரயிலில் வருபவர்கள், அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை. எனவே, சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில் சேவையை இயக்கினால், சிம்சனில் இருந்து பேருந்து வசதியும், மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்து செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

₹274.20 கோடி திட்ட மதிப்பீடு
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ₹274.20 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு 2021-22ல் ₹5 கோடியும், 2022-23ல் ₹54 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டுக்கு ₹96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை கடற்கரை-சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ரத்து: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: