திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அருங்காட்சியத்திற்கு 2 கட்டிடங்கள் வாடகைக்கு விட திட்டம் அனுமதி பெறுவதற்கான பணிகள் தீவிரம் வேலூர் கோட்டையில் உள்ள பழமைவாய்ந்த 56 கட்டிடங்களில்

வேலூர், மே 31: வேலூர் கோட்டையில் உள்ள பழமைவாய்ந்த 56 கட்டிடங்களில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அருங்காட்சியத்திற்கு 2 கட்டிடங்களை வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி பெறுவற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே தரைக்கோட்டைகளில் இன்றளவும் வலுவாக காட்சியளிக்கும் வேலூர் கற்கோட்டையானது, நாற்புறமும் அகழி நீர் நிறைந்திருக்க, கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடு, மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அதேபோல் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தையும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் பார்வையிடுவதுடன் கோட்டையையும் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் கோட்டையில், ஒரு சில கட்டிடங்களை தவிர மற்ற அனைத்து கட்டிடங்களும் பாழடைந்துவிட்டது. இந்த கட்டிடங்களுடன் கோட்டைக்குள் உள்ள 56 கட்டிடங்களில், பழுதான கட்டிடங்களை புனரமைத்து வாடகைக்கு விட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி வேலூர் கோட்டையில் வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வந்த கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருங்காட்சியம் எதிரே உள்ள கட்டிடத்தினை அருங்காட்சியத்திற்கு வாடகைக்கு விடுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டையில் 56 கட்டிடங்களில் இந்த 2 கட்டிடங்களை அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கோட்டையில் கட்டிடங்கள் வாடகைக்கு விட்டாலே பாதுகாப்பாக இருக்கும், அதோடு பராமரிக்க வேண்டிய சூழலும் இருக்காது. எனவே கோட்டையில் உள்ள கட்டிடங்கள் வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற 56 கட்டிடங்களும் வாடகைக்குவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருங்காட்சியகம் எதிரே உள்ள கட்டிடம் அருங்காட்சியகத்திற்கும், வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வந்த கட்டிடம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும் வாடகைக்கு விடுவற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அருங்காட்சியத்திற்கு 2 கட்டிடங்கள் வாடகைக்கு விட திட்டம் அனுமதி பெறுவதற்கான பணிகள் தீவிரம் வேலூர் கோட்டையில் உள்ள பழமைவாய்ந்த 56 கட்டிடங்களில் appeared first on Dinakaran.

Related Stories: