அரசியல், சமூக தலைவர்களுடன் சந்திப்பு; மணிப்பூரில் அமித்ஷா அமைதி முயற்சி: கலவரம் பாதித்த பகுதியில் நேரில் ஆய்வு; முதல்வரை மாற்ற மக்கள் போராட்டம்

இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். மாநிலத்தின் இரு சமூகங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகளை தொடர்ந்து சந்திக்கிறார். கலவரம் பாதித்த பகுதியையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களான மெய்டீஸ் பிரிவினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் பழங்குடியினர்களான நாகா, குக்கி சமூகத்தினர் நடத்திய பேரணியைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதுவரை வன்முறையில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் ஒரு மாதமாக இனக்கலவரம் தொடர்ந்தாலும், நடுவில் சில வாரங்கள் அமைதி திரும்பிய நிலையில், கடந்த ஞாயிறு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது. ராணுவமும், துணை ராணுவமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மணிப்பூருக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார். கலவரம் பாதித்த பிறகு மணிப்பூருக்கு அமித்ஷா வருவது இதுவே முதல் முறை. நேற்று முன்தினம் இரவே மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண் தலைவர்களை அமித்ஷா நேற்று சந்தித்து பேசினார்.
மாலையில், எம்எல்ஏக்களை சந்தித்து அமைதி நடவடிக்கைக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மெய்டீஸ் மற்றும் குக்கி பிரிவு அரசியல் தலைவர்களையும், அவற்றின் பல்வேறு அமைப்பின் தலைவர்களையும் அமித்ஷா தொடர்ந்து சந்தித்து அமைதிக்கான தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதோடு, கலவரம் பாதித்த சுராசந்த்பூருக்கு அவர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதல்வர் பிரேன்சிங்கை மாற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அமித்ஷா வருகையைத் தொடர்ந்து, கலவரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக ஒன்றிய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நேற்று அறிவித்தன. மேலும் ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.5 கோடி நிதிஉதவியை மணிப்பூர் கேட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.

மணிப்பூர் செல்ல அனுமதி கேட்கிறார் மம்தா
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்க கேட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூரில் உள்ள உண்மை நிலைமையை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல நான் அங்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில காலம் ஆகும்
முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘2020க்கு முன்பே மணிப்பூரில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின் கிளர்ச்சியின் நிலைமை சீரடைந்ததால் படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது இரு பிரிவினர் இடையேயான மோதல். இது சட்டம் ஒழுங்கு பிரச்னை. இந்த பிரச்னையில் நாங்கள் மாநில அரசுக்கு உதவுகிறோம். ராணுவமும், அசாம் ரைபிள்சும் சிறப்பாகப் பணியாற்றி, ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனாலும், மணிப்பூரில் உள்ள சவால்கள் முற்றிலும் நீங்கிவிடவில்லை. இது சரியாக, இன்னும் சிறிது காலம் எடுக்கும்’’ என்றார்.

The post அரசியல், சமூக தலைவர்களுடன் சந்திப்பு; மணிப்பூரில் அமித்ஷா அமைதி முயற்சி: கலவரம் பாதித்த பகுதியில் நேரில் ஆய்வு; முதல்வரை மாற்ற மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: