2 ஆண்டுகள் வரையிலும் நீதிபதிகள் ஓய்வுக்கு பின் புதிய பதவி ஏற்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ஓய்வு பெற்ற பின்னர் இரண்டு ஆண்டுகள் வரை நீதிபதிகள் வேறு எந்த புதிய பதவிகளையும் ஏற்க கூடாது என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மும்பை வழக்கறிஞர் சங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வு பெற்றப்பிறகு பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அவர்களுக்கு ஒன்றிய அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது. இதற்கு பொதுவாகவே பல ஆண்டுகளாக விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மும்பை வழக்கறிஞர் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘நீதித்துறையின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை பாதுகாக்க வேண்டும். நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே பிற புதிய பதவிகளை ஏற்றுக் கொள்வது என்பது தவறான கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே அவர்கள் ஓய்வு பெற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு புதிய பதவிகளையும் அதாவது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஏற்க கூடாது.

இதுகுறித்து பரிசீலனை செய்து ஒரு வரையறையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அப்துல் நசீர் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவரங்களும் தாக்கல் செய்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2 ஆண்டுகள் வரையிலும் நீதிபதிகள் ஓய்வுக்கு பின் புதிய பதவி ஏற்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: