ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்

சென்னை: குலுகோஸ் ஊசியினை அகற்றக்கோரி வாக்குவாதம் செய்த நோயாளி திடீரென, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவரை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தினார். இதனை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இவர் நேற்று இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு 1 மணியளவில் கல்லீரல் பிரச்னை காரணமாக உள்நோயாளியாக பாலாஜி என்பவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர் சூர்யா மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், பாலாஜி தன் கையில் சொருகி வைக்கப்பட்டிருந்த குலுகோஸ் ஊசியினை அகற்றக்கோரி பயிற்சி மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு மருத்துவ உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் தாக்க முயன்றுள்ளார். இதில் மருத்துவர் சூர்யாவுக்கு லோசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதலை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வரும் காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும் மருத்துவமனை மருத்துவரின் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பாக காணப்பட்டது.

The post ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: