பழவேற்காடு அருகே சூறை காற்றால் பேருந்தின் மேற்கூரை சேதம்: பயணிகள் அவதி

பொன்னேரி: பழவேற்காடு அருகே பிரளியம்பாக்கம் என்ற இடத்தில் சூறை காற்றால் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்து சேதம் அடைந்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் மக்கள் தத்தளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்த தடம் எண் 558பி மாநகர பேருந்து பிரளயம்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. இதில் 25 பயணிகள் இருந்தனர்.

அப்போது, சூறைக்காற்றில் சிக்கி பேருந்தின் மேல் கூரை முற்றிலும் பெயர்ந்தும், கழன்று சாலையில் தொங்கியது. உடனே, ஓட்டுநர் அதன் சத்தத்தை கேட்டதும் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதில், பேருந்தின் ேமற்கூரை முற்றிலும் பெயர்ந்து கழன்றதால் சூறைக்காற்றால் பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி நடுரோட்டில் நின்றனர். இதில் பயணிகள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற மாற்று மாநகரப் பேருந்தின் மூலம் பயணிகளை ஏற்றி பொன்னேரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, மாநகர பேருந்து பழுது பார்க்கும் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் பரப்பரப்பு காணப்பட்டது.

The post பழவேற்காடு அருகே சூறை காற்றால் பேருந்தின் மேற்கூரை சேதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: