இம்பால்: மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவம் குறித்து அம்மாநில ஆளுநரை நேற்றிரவு சந்தித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 40 குக்கி தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றதாக அம்மாநில அரசு தொிவித்துள்ளது. அதேநேரம் நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர். பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் மாநிலத்துக்கு நான்கு நாள் பயணமாக நேற்று சென்றார்.
அவர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து மாநில ஆளுநர் அனுசுயா உகேயிடம் விசாரித்தார். முன்னதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டேகா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் அங்கு இயல்புநிலையை மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் ஜூன் 1ம் தேதி வரை மணிப்பூரில் தங்கியிருக்கும் அமித் ஷா, மணிப்பூரின் நிலைமை குறித்து பலகட்டங்களாக ஆய்வு நடத்துகிறார்.
The post மணிப்பூரில் 4 நாட்கள் முகாம் ஆளுநருடன் அமித்ஷா சந்திப்பு வன்முறையால் தொடர் பதற்றம் appeared first on Dinakaran.