ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றதால் இந்திய ரூபாய் மீதான ஸ்திரத்தன்மையில் சந்தேகம்: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் மற்றும் திரும்ப பெறும் நடவடிக்கையானது இந்திய ரூபாய் மீதான நேர்மை, ஸ்திரதன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக சமீபத்தில் ஒன்றிய அரசு அறிவித்தது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,‘‘முக்கிய பொருளாதார குறியீடுகள் கீழ் நோக்கி செல்கின்றன. பொருளாதாரம் உயர் வளர்ச்சிப்பாதையை எட்டும் என்ற நம்பிக்கை குறைவாக இருக்கிறது. மணிப்பூர் கலவர சம்பவத்தில் 75 உயிர்கள் பலியாகி உள்ளன. மணிப்பூரில் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

ஆனால் பிரதமர் ஏன் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எந்த ஒரு அமைச்சரும் சென்று சந்திக்கவில்லை. ஒரு எம்பிக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களை 30 நாட்கள் போராட்டம் செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள்? கடந்த ஒன்பது ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. அரசு தனது தவறுகளை சரி செய்து அனைத்து மக்களுக்காகவும் ஆட்சி செய்வதற்கு முயற்சி எடுக்கவில்லை. 2024ம் ஆண்டு பொது தேர்தலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது” என்றார்.

* மம்தா கருத்துக்கு ஆதரவு
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என முதல்வர் மம்தா கூறியிருந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் இதனை வரவேற்றுள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், ‘முதல்வர் மம்தாவின் அறிக்கையை வரவேற்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல வேண்டும். பேச்சுவார்த்தை புரிதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

* நிர்மலா சீதாராமன் கண்டனம்
ப.சிதம்பரம் பேட்டி குறித்து மும்பையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்திய ரூபாய், மத்திய வங்கியின் முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவதூறுகளை வெளிப்படுத்துவது முன்னாள் நிதியமைச்சருக்கு அழகல்ல. முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினோம். ஆனால் சரியான பதில் எங்களுக்கு கிடைத்தது இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றதால் இந்திய ரூபாய் மீதான ஸ்திரத்தன்மையில் சந்தேகம்: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: