புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் 9 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் பாஜ அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதனை பாஜ கட்சி அடுத்த ஒரு மாதத்திற்கு கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் பாஜ ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினர்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவிலும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கவுகாத்தியிலும், டெல்லியில், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அகமதாபாத்திலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையிலும், ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாட்னாவிலும் பாஜ சாதனைகளை விளக்கினர்.
* மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பாஜவுக்கு வெற்றி
ஒன்றிய பாஜ அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி அகமதாபாத்தில் நேற்று, ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ மக்களுக்கு அதிகாரமளித்தலை பாஜ அரசு விரும்புகிறது. தாஜா செய்வதை விரும்பவில்லை. அதனால், தான் முற்பட்ட வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மக்களுக்கு பணியாற்றுவதை நாங்கள் விரும்புகிறோம்.சிலர் அதில் அரசியல் செய்கின்றனர். வரும் மக்களவை தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கும்.’’ என்றார்.
The post நாடு முழுவதும் ஒன்றிய அரசின் 9 ஆண்டு சாதனைகளை பேசிய பாஜ தலைவர்கள்: அடுத்த ஒருமாதம் தொடரும் appeared first on Dinakaran.