கர்நாடகாவை போல் ம.பி. சட்டசபை தேர்தலிலும் 150 இடங்களை பெறுவோம்: ராகுல்காந்தி நம்பிக்கை

புதுடெல்லி: கர்நாடகாவை போல் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் 150 இடங்களை பெறும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்த ஆண்டு இறுதியில் ம.பி. தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா தேர்தல் வெற்றியை போல் மபியிலும் வெற்றி பெற டெல்லியில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மபி காங்கிரஸ் தலைவர்கள்சந்தித்து பேசினார்கள்.

முன்னாள் முதல்வர் கமல்நாத், திக்விஜய்சிங், மபி காங்கிரஸ் பொறுப்பாளர் அகர்வால் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனை முடிந்த பிறகு ராகுல்காந்தி கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது பற்றி ஒரு விரிவான ஆலோசனை நடத்தினோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்தியப்பிரதேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். கமல்நாத் கூறும்போது,’ நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம். ஆட்சியை பிடிப்பதே எங்கள் குறிக்கோள்’ என்றார்.

* ராஜஸ்தான், பஞ்சாப் நிலவரம் குறித்து ஆலோசனை
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று ராஜஸ்தான்,பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்பட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். அசோக்கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

* 200 இடங்களுக்கும் மேல் பா.ஜ வெற்றி பெறும் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நேற்று கூறியதாவது:
மபி சட்டசபை தேர்தலில் இந்த முறை 200க்கும் மேற்பட்ட இடங்களைக் பா.ஜ கைப்பற்றும். இதற்காக புதிய கோஷம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாஜ 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகாவை போல் ம.பி. சட்டசபை தேர்தலிலும் 150 இடங்களை பெறுவோம்: ராகுல்காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: