சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மே 31ம் தேதி காலை கிண்டியில் உள்ள சிட்கோ கட்டிட வளாகத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்தான திட்ட விளக்கக் கருத்தாக்கத்தினை தொடங்கி வைக்கவுள்ளார். அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோரின் பங்கு குறைவாயிருப்பதை உணர்ந்து அதனை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோர்க்கெனப் பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது உணவுப்பதப்படுத்தல், தானி பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகைக் கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட ட்ரேவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜரேட் ட்ரக் உள்ளிட்ட எந்தத் திட்டமாகவும் இருக்கலாம். இயங்கிக் கொண்டிருக்கும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோர்களின் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் மானியயத்துடன் கடன் உதவி வழங்கப்படும். மொத்த திட்டத் தொகையில் மானியம் 35% ஆகும்.
மானிய உச்ச வரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35% மானியம் உண்டு. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, ஒரு நபர் கம்பனி, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல் வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை.
மொத்த திட்டத் தொகையில் 65% வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர்க்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும்.
கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் சென்னை மாவட்டத்தில், தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகமும் இதர மாவட்டங்களில் மாவட்டத் தொழில் மையம் விளங்கும். தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி & எஸ்.டி தொழில்முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய மாவட்டத் தொழில் மையங்களை அணுகலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் கிண்டியில் உள்ள சிட்கோ கட்டிட வளாகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்; மே 31ல் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!! appeared first on Dinakaran.