வெம்பக்கோட்டை அகழாய்வு கண்காட்சியை காண மாணவ, மாணவியர் வருகை அதிகரிப்பு

ஏழாயிரம்பண்ணை : கோடை விடுமுறை என்பதால் வெம்பக்கோட்டை அகழாய்வு கண்காட்சியை காண மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தின் வழியாக பாய்ந்தோடும் வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் முதுமக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வெம்பக்கோட்டை உட்பட 7 இடங்களில் அகழாய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை தமிழக தொல்லியல் துறையினரால் வெம்பக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் மொத்தம் 16 குழிகள் தோண்டப்பட்டு 3,254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை, அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட அதே பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கீழடிக்கு நிகராக இந்த அகழாய்விலும் சுடுமண் பொம்மைகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், கண்ணாடி வளையல்கள், தங்க ஆபரணங்கள், சங்கு வளையல்கள் மண்பாண்டங்கள் போன்ற அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை அரங்கத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் பலர் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகளின் வருகை அதிகமாக உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கல்வி சுற்றுலா சார்பில் நேற்று 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து கண்டு ரசித்தனர்.இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், இதற்கான அனுமதி இலவசம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post வெம்பக்கோட்டை அகழாய்வு கண்காட்சியை காண மாணவ, மாணவியர் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: