தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நாளை மற்றும் நாளை மறுநாள் 31ம் தேதி லட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 1 மற்றும் 2ம் தேதியில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: