அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு..!!

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தி ஜலுக்பரி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குவஹாத்தி இணை போலீஸ் கமிஷனர் துபே பிரதீக் விஜய் குமார் நடத்திய “முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அசாம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் பயணித்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி ஜலுக்பரி மேம்பாலம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கவுகாத்தியைச் சேர்ந்த அரிந்தம் போவல் மற்றும் நியோர் டெகா, சிவசாகரைச் சேர்ந்த கவுசிக் மோகன், நாகோவைச் சேர்ந்த உபங்ஷு சர்மா, மஜூலியைச் சேர்ந்த ராஜ் கிரண் புயான், திப்ருகாரைச் சேர்ந்த எமோன் பௌரா, மங்கல்டோயைச் சேர்ந்த கவுசிக் பருஷ்.

மேலும் கார் மோதிய பிக்-அப் வேனில் இருந்த மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விபத்து குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள டிவீட்டர் பதிவில் கூறியதாவது ஜலுக்பரியில் நடந்த சாலை விபத்தில் இளம் மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜிஎம்சிஎச் அதிகாரிகளிடம் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன” என்றார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: