ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரின் வாழ்த்துச் செய்தியை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் வாசித்தார். அதில் ஜனாதிபதி முர்மு, ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. நாடாளுமன்றம் நாட்டிற்கு ஒரு வழிகாட்டி. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எங்கள் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்’ என குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்த்துச் செய்தியில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவின் வளர்ச்சிக்கு சாட்சியாக இருக்கும். இது, ஒருமித்த கருத்தை உருவாக்கவும், அடிமை மனப்பான்மையில் இருந்து விடுதலை பெறுவதற்கான அடையாளமாகவும் செயல்படும். மேலும், புதிய நாடாளுமன்றம் நாட்டு மக்களின் நம்பிக்கை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்’ என கூறி உள்ளார்.

* நன்றி கூறிய சபாநாயகர்

நாடாளுமன்ற திறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘‘இந்த தருணத்தை ஒட்டுமொத்த தேசமும் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த புதிய நாடாளுமன்றம் இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டி முடித்ததற்காக, பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறினார். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பேசுகையில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க மறக்க முடியாத தருணம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை, ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சின்னம்’’ என்றார்.

* சாவர்க்கர் பிறந்தநாள் மோடி மலர் மரியாதை

வீரசாவர்க்கர் பிறந்தநாளையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் அவரது உருவ படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்று சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தினர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘வீரசாவர்க்கர் தன் எண்ணங்களால் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தி சுடரை ஏற்றி வைத்தார்’ என புகழ்ந்துள்ளார். மகாராஷ்டிராவில் 1883ல் பிறந்தவரான சாவர்க்கரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவராகவும் ஹீரோவாகவும் இந்துத்துவா அமைப்புகள் போற்றி புகழ்வது குறிப்பிடத்தக்கது.

* சிறந்த பயணத்தின் தொடக்கப் புள்ளி

புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘புதிய நாடாளுமன்றம், மக்களின் நம்பிக்கைகள் மலரும் இடம் மட்டுமல்ல, அமிர்த காலத்தில் நம் தேசம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பயணத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள செங்கோல் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது. இது, நமது செழுமையான கலாச்சாரத்தின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும்’ என கூறி உள்ளார்.

 

The post ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: