எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் திறப்பு விழாவா? முடிசூட்டு விழாவா?

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற திறப்பு விழா குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய கருத்துகள்:மல்லிகார்ஜூன கார்கே (காங். தேசிய தலைவர்): புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் உரிமை ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டது. சர்வாதிகார சக்தியுடன் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தெருவில் அடித்து உதைக்கப்பட்டனர். இதன் மூலம் ஜனநாயகம், தேசியவாதம், பெண் குழந்தைகள் என்ற பாஜ ஆர்எஸ்எஸ் ஆட்சியாளர்களின் 3 பொய்கள் அம்பலமாகி உள்ளன.

* ராகுல் காந்தி (காங். முன்னாள் தலைவர்): நாடாளுமன்றம் மக்களின் குரல். ஆனால் பிரதமர் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல் நடத்துகிறார்.

* ஜெய்ராம் ரமேஷ் (காங். பொதுச் செயலாளர்): பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி முர்மு, புதிய நாடாளுமன்றத்தை திறந்து தனது அரசியலமைப்பு பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்ற நடைமுறைகளை முற்றிலும் அலட்சியப்படுத்தும் சுய சர்வாதிகார பிரதமர், அரிதாகவே நாடாளுமன்றத்திற்கு வருபவர், புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார்.

* சரத் பவார் (தேசியவாத காங். தலைவர்): புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் நிகழ்த்திய பல்வேறு சடங்குகள் நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லப்படுவதை காட்டுகிறது. நாட்டின் முதல்
பிரதமர் நேரு அறிவியல் பூர்வமான சமுதாயத்தை கற்பனை செய்தார், ஆனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. புதிய இந்தியா என கூறுவதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

* சீதாராம் ஜெயச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்): ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சிகள் இல்லாமல் புதிய இந்தியா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியா என்பது தேசம் மற்றும் மக்கள், புதிய இந்தியா என்பது மன்னரும், மக்களும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் செங்கோலுக்கு இடமில்லை.

* அகண்ட பாரதம் சுவர் ஓவியங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பண்டைய கால இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளன. பிரிக்கப்படாத இந்தியாவின் கடந்த கால முக்கிய நகரங்கள் மற்றும் இன்றைய பாகிஸ்தானில் உள்ள டாக்சிலாவின் இந்திய பாரம்பரியங்களை குறிப்பிடும் வகையில் உள்ளன. இவற்றை அகண்ட பாரதம் என பாஜ தலைவர்கள் புகழ்ந்து வருகின்றனர். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டிவிட்டரில், ‘தீர்வு தெளிவாக உள்ளது அகண்ட பாரதம்’ என பதிவிட்டுள்ளார். ‘புதிய நாடாளுமன்றத்தில் அகண்ட பாரதம். இது நமது சக்திவாய்ந்த மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவை பிரதிபலிக்கிறது’ என பாஜ எம்பி மனோஜ் கோடக் டிவிட் செய்துள்ளார். பொதுவாக அகண்ட பாரதம் என்பது ஆர்எஸ்எஸ்சின் பிரசாரமாகும். இது தற்போது நாடாளுமன்றத்தின் சுவர் ஓவியங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

The post எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் திறப்பு விழாவா? முடிசூட்டு விழாவா? appeared first on Dinakaran.

Related Stories: