மக்களவை தேர்தலுக்கு முன் நடக்காது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும்: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதை இந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வந்தன. வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு நாட்டின் எந்த பகுதியிலும் நிர்வாக எல்லை மாற்றங்கள் செய்யப்பட கூடாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி இருந்தார்.

தற்போதுள்ள நடைமுறைப்படி ஜூன் 30ல் இருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் அதாவது அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகுதான் கணக்கெடுப்பு நடத்த முடியும். அதே நேரத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் 30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவே மூன்று மாதங்கள் போதாது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விடும். குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் ஆரம்பமாகிவிடும். ஒரே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளை அரசு ஊழியர்களால் கவனிக்க முடியாது. தேர்தலுக்குதான் அதிக முக்கியவத்துவம் தரப்படும். இதனால், அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் முடியும்வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 31 கேள்விகள் தயார்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 31 கேள்விகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தில் தொலைபேசி இணைப்பு, இணைய இணைப்பு, மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் உள்ளதா, சைக்கிள், ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது மொபெட் உள்ளதா, கார், ஜீப் அல்லது வேன் உள்ளதா என்ற கேள்விகள் கேட்கப்படும். வீட்டில் என்ன தானியங்களை சாப்பிடுகிறார்கள், குடிநீரின் முக்கிய ஆதாரம், கழிப்பறை மற்றும் அதன் வகை, கழிவு நீர் வெளியேறும் இடம், குளிக்கும் வசதி, சமையலறை மற்றும் எரிவாயு இணைப்பு, பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் ஆகியவை பற்றி கேட்கப்படும்.
வீட்டில் ரேடியோ, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி உள்ளதா? அறைகளின் எண்ணிக்கை மற்றும் குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை விவரமும் சேகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மக்களவை தேர்தலுக்கு முன் நடக்காது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: