சிவகாசி மாநகராட்சியில், லாரிகளை நிறுத்த இடவசதி செய்து தர கோரிக்கை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி பகுதியில் வெளிமாநில சரக்கு லாரிகளை நிறுத்தி வைக்க தனி இடவசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை வரிவாக்கம், போக்குவரத்து பாதுகாப்பு வசதிகள் இல்லை. சிவகாசி நகருக்குள் வந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் அச்சு, தீப்பெட்டி, பட்டாசு தொழில் நடைபெறுகிறது. இங்கிருந்து வட மாநிலங்களுக்கு தினமும் 200 லாரிகளில் பட்டாசு, தீப்பெட்டி, டைரி, காலண்டர் லோடு அனுப்படுகிறது. பத்ரகாளியம்மன் கோவில் சாலை, சிறுகுளம் கண்மாய் சாலை, வேலாயுத ரஸ்தா சாலை, விருதுநகர் சாலைகளில் ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சரக்குகளை ஏற்றி செல்ல தினமும் வெளிமாநில லாரிகள் சிவகாசி வருகிறது.

லோடு கிடைக்கும் வரை சரக்கு லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகிறது. ஒரு சில லாரிகளை வார கணக்கில் நிறுத்தப்பட்டு லோடு ஏற்றி செல்கின்றனர். இந்த லாரிகள் சாலைகளில் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதால் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் எந்த பக்கமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கும் நிலையும் ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சிவகாசி மாநகராட்சி பகுதியில் சரக்கு லாரிகளை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசி மாநகராட்சியில், லாரிகளை நிறுத்த இடவசதி செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: