நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது!

சென்னை: நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர்பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இது முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான குடிமைப் பணிகளில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியானது. தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 7 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே 28ம் தேதி (இன்று) நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் இன்று 73 நகரங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடைபெற இருக்கிறது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Related Stories: