ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

புதுடெல்லி: அதிநவீன வசதிகளுடன் ரூ.1250 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு யாகம், பூஜையுடன் இன்று திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் கடந்த 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தை கட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ஒன்றிய பாஜ அரசு முடிவு செய்து, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முதலில் ரூ.977 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்க ரூ.1250 கோடி செலவானது. பல நவீன வசதிகளுடன், புதுமையான கட்டிடக் கலையுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடக்க உள்ளது. இரண்டு கட்டமாக திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 7.15 மணிக்கு திறப்பு விழா தொடங்குகிறது. அப்போது பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தருவார்.

அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடங்கும். சுமார் 1 மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் 8.30 மணி அளவில் பிரதமர் மோடி மக்களவை அரங்கிற்கு வருவார். காலை 9 மணி அளவில் பிரதமரிடம் தமிழகத்தின் ஆதீனங்கள் வழங்கிய செங்கோல், வேத மந்திரங்கள் முழங்க மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்படும். இதைத் தொடர்ந்து, 9.30 மணிக்கு கடவுள் வழிபாட்டுடன் முதல் கட்ட நிகழ்ச்சிகள் முடிவடையும். பின்னர் பிற்பகல் 12 மணிக்கு தேசிய கீதத்துடன் திறப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கும். அப்போது, புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி திறந்துவைக்க இருக்கிறார்.

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாபதி உரைகளை வாசிப்பார். பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் உரை நிகழ்த்துவர். தொடர்ந்து விழாவில் சிறப்பு அம்சமாக 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிடுவார். திறப்பு விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முறைப்படி, நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவே திறந்து வைக்க வேண்டும், ஆனால் அவரை அழைக்காமல் புறக்கணித்ததால் இந்த விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

அதே சமயம், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளன. எனினும் முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் இல்லாமலேயே போதிய ஒற்றுமை இன்றியே புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை ஒட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் கோயில்
ஒன்றிய அமைச்சர் ஹர்திப் பூரி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோவை வெளியிட்டு அதனை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த டிவிட்டை டேக் செய்துள்ள பிரதமர் மோடி, ‘‘இந்த ஜனநாயக கோயில் இந்தியாவின் வளர்ச்சி பாதை மற்றும் பல லட்சம் பேருக்கு அதிகாரமளித்தலை தொடர்ந்து வலுப்படுத்தும். ‘எனது நாடாளுமன்றம்,எனது பெருமை’ என்ற ஹேஸ்டேக்குடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?
* 4 மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் விஐபி, எம்பிக்கள், பார்வையாளர்களுக்கு என தனித்தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

* முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.

* எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

* மக்களவை 888 உறுப்பினர்கள் அமரும் வகையிலும், மாநிலங்களவை 300 உறுப்பினர்கள் அமரும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. மொத்தமாக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் 1,280 பேர் அமரும் வகையில் மக்களவை சேம்பர் அமைக்கப்பட்டுள்ளது.

* புதிய மக்களவைக் கட்டிடம் தேசிய பறவையான மயிலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களவை கட்டிடம் தேசிய மலரான தாமரையை ஒத்திருக்கிறது.

* மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்படும்.

* புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒவ்வொரு இருக்கைகளிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும். ஒவ்வொரு இருக்கையும் டிஜிட்டல் அமைப்பு மற்றும் தொடுதிரை வசதிகள் கொண்டிருக்கும்.

* புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டாலும், பழைய நாடாளுமன்ற கட்டிடமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.

* மத்தியில் இருக்கும் முற்றம் இரண்டு அவைகளின் உறுப்பினர்களின் சந்திப்புக்கான திறந்தவெளி அமைப்பாக இருக்கும்.

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஓர் அரசியலமைப்பு அரங்கு அமைந்துள்ளது.

* புதிய நாடாளுமன்ற கட்டுமான பொருட்கள், மரசாமான்கள், கலை பொருட்கள் அனைத்தும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, டாமன் டையு, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒருசேர வடிவமைக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கும் மற்றும் பங்கேற்கும் கட்சிகள்
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, தேசிய மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளன. இக்கட்சிகளுக்கு 239 எம்பிக்கள் உள்ளனர். அதே சமயம், பாஜ, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), சிக்கிம் கிராந்திகாரி மோர்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி, அப்னா தளம், இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், மிசோ தேசிய முன்னணி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஷிரோண்மணி அகாலி தளம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

அவமதிக்கும் செயல்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ் உட்பட 20 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘‘சிலரை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடை விதிக்கப்பட்டது வேறு விஷயம். முன்னதாக அவர்கள் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு காரணங்களை கண்டுபிடித்து வந்தனர். தற்போது இவர்கள் புறக்கணிப்பது குறித்து பேசுகிறார்கள். இது அவமதிக்கும் செயலாகும்’’ என்றார்.

தேவையற்ற பிரச்னை
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவரான குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில் , ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை யார் திறக்க வேண்டும்? ஜனாதிபதியா அல்லது பிரதமரா? என்பதை விட, நாட்டு மக்கள் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் தேவையின்றி சத்தமிடுகின்றன’’ என்றார்.

The post ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: