3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற குறைகளை களைய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது, குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது, அளவுக்கு அதிகமானது, தேவையற்றது ஆகும்.

கைரேகை வழியான வருகைப் பதிவேடு, கண்காணிப்பு கேமிராக்கள் ஆகியவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயமாக்கியிருப்பதன் காரணத்தை நான் அறிவேன், அது நியாயமானதும் கூட. ஆனால், இதுகுறித்த இந்திய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கைக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்தும் கூட, அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற குறைகளை களைய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: