புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு: தமிழக ஆதீனங்கள் வழங்கினர்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் இன்று நிறுவப்பட உள்ள செங்கோலை பிரதமர் மோடியிடம் தமிழக ஆதீனங்கள் நேற்று வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட உள்ளது. கடந்த 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற போது, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உருவாக்கப்பட்ட சோழர் காலத்து பாரம்பரிய செங்கோல், நாட்டின் முதல் பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்டது. அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட அந்த செங்கோலை, தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ பாஜ அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், ஒன்றிய கலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை வழங்கினார். அப்போது, ஆதீனங்கள் வேத மந்திரங்களை முழங்கினார். அவர்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். பிரதமர் மோடிக்கு மதுரை, தருமபுர ஆதீனங்கள் நினைவு பரிசை வழங்கி ஆசி வழங்கினர். இந்நிகழ்வின்போது, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேசியத்துக்கான பங்களிப்பில் மையமாக இருக்கும் தமிழ்நாடு: மோடி புகழாரம்இந்நிகழ்ச்சியில் ஆதீனங்களை சந்தித்த பின் மோடி பேசுகையில்,‘‘ பிரிட்டிஷ் அரசாங்கத்தை தூக்கி எறிந்த பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய தேசியத்துக்கான பங்களிப்பை தமிழ்நாடு அளித்துள்ளது. சுதந்திரத்துக்காக தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் செங்கோலை ஒரு ஊன்று கோல் (வாக்கிங் ஸ்டிக்) போல கருதி புறக்கணித்தனர். செங்கோலுக்கு உரிய மதிப்பு தற்போது மீட்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததை எடுத்துக்காட்டும் வகையில் செங்கோல் அமைந்துள்ளது’’ என்றார்.

The post புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு: தமிழக ஆதீனங்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: