பீகார் முதல்வர் நிதிஷ் கேள்வி: புதிய நாடாளுமன்றத்துக்கு தற்போது தேவை என்ன?

பாட்னா, மே.28: ‘புதிய நாடாளுமன்றத்துக்கு தற்போது தேவை என்ன?’ என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதி திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாததை கண்டித்தும் 20 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், “புதிய நாடாளுமன்றத்துக்கு தற்போது என்ன தேவை? வேண்டுமெனில் வரலாற்று சிறப்பு மிக்க பழைய நாடாளுமன்ற கட்டிடத்தையே புதுப்பிக்கலாம்.

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் வரலாற்றை திரித்து எழுத முயற்சி செய்கின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இருவரையும் அழைக்காதது வருத்தமளிக்கிறது. இன்று (நேற்று) பாட்னாவில் சில நிகழ்ச்சிகள் இருந்ததால் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அக்கூட்டத்திற்கு பீகார் அரசு சார்பில் வேறு அதிகாரிகளை அனுப்புகிறோம் என தகவல் அனுப்பியும் அவர்கள் எந்த பதிலும் தரவில்லை. எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்காததற்கு ஒன்றிய அரசே காரணம்” என்று தெரிவித்தார்.

The post பீகார் முதல்வர் நிதிஷ் கேள்வி: புதிய நாடாளுமன்றத்துக்கு தற்போது தேவை என்ன? appeared first on Dinakaran.

Related Stories: