சந்திரசேகர் ராவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: அவசர சட்டத்தை தோற்கடிப்போம் என சூளுரை

ஐதராபாத், மே.28: ‘டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்தை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்’ என கெஜ்ரிவாலை சந்தித்த தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லி அரசு நிர்வாகம் தொடர்பாக பல்வேறு விவகாரங்களில் டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது, துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டுதலின்கீழ் துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை நீர்த்து போக செய்யும் விதமாக, டெல்லி அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் துணைநிலை ஆளுநருக்கே இருக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை கருப்பு சட்டம் என்று கூறியுள்ள ஆம் ஆத்மி அரசு, புதிய அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா(உத்தவ்) அணி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று சந்தித்து ஆதரவு கோரினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது, “டெல்லி அரசு நிர்வாகத்துக்கு எதிரான அவசர சட்டத்தை கொண்டு வந்து டெல்லி மக்களை மோடி அரசு அவமதித்துள்ளது. இந்த அவசர சட்டத்தை உடனே பாஜ அரசு திரும்ப பெற வேண்டும். நாங்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நின்று நாடாளுமன்றத்தில் நாங்கள் அவசர சட்டத்தை தோற்கடிப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்னை தர வேண்டாம். அரசை செயல்பட விடுங்கள்” என்று கூறினார்.

The post சந்திரசேகர் ராவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: அவசர சட்டத்தை தோற்கடிப்போம் என சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: