மணிப்பூரில் மீண்டும் வன்முறையை தொடர்ந்து ராணுவ தலைமை தளபதி நேரில் ஆய்வு

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கள நிலவரத்தை ஆய்வு செய்ய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பெரும்பான்மை பிரிவினருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையே சமீபத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்த நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மதிப்பாய்வு செய்யும் வகையில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே இரண்டு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். அவருடன் கிழக்கு கமாண்டன்ட் லெப்டினல் ஜெனரல் ரானா பிரதாப் கலிதா உடன் சென்றுள்ளார். இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘ஜெனரல் மனோஜ் பாண்டே ஆளுநர் மற்றும் முதல்வர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து சட்டம், ஒழுங்கு குறித்து கலந்தாலோசனை நடத்துகிறார். மேலும் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்யும் அவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்’’ என்றார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறையை தொடர்ந்து ராணுவ தலைமை தளபதி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: