இந்து மக்கள் கட்சி தலைவர் சுவாமி தரிசனம் செல்போனில் படம் எடுத்தவரிடம் விசாரணை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, மே 27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, செல்போனில் படம் எடுத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பையும் கூடுதலாக செய்ய வேண்டும். நாடளுமன்ற புதிய கட்டிடத்தில் ஆதினங்கள் சார்பில் அளித்த செங்கோல் வைப்பது பெருமைக்குரியது. இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு அர்ஜூன் சம்பத் வெளியே வரும்போது அவரை ஒரு வாலிபர் செல்போனில் படம் பிடித்தார். மாற்று மதத்தை சார்ந்த ஒருவர் படம் எடுப்பதால் அவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்படுவதாக அங்கிருந்த போலீசாரிடம் அர்ஜூன் சம்பத் புகார் தெரிவித்தார்,
அதைத்தொடர்ந்து, அந்த நபரை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போளூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாதாரணமாக தான் செல்போனில் படம் எடுத்ததாகவும், அர்ஜூன் சம்பத்தை படம் எடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். சிறிது நேர விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.

The post இந்து மக்கள் கட்சி தலைவர் சுவாமி தரிசனம் செல்போனில் படம் எடுத்தவரிடம் விசாரணை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: