திருவண்ணாமலை, மே 27: திருவண்ணாமலையில் 4வது மகனை பக்கத்தில் அமர வைத்து நண்பர்களுடன் தந்தை மது அருந்திய வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள தனியார் மதுபான கூடத்திற்குள் 4 வயது சிறுவனை அவனது தந்தை அழைத்து சென்று தனக்கு அருகே உட்கார வைத்தபடி மது குடித்திருக்கிறார். மேலும், அவரது நண்பர்கள் சிலரும் அவருடன் அமர்ந்து மது குடித்துள்ளனர். சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக மதுபான கூடத்தில் அந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான். சிறுவன் முன்பு தந்தையும், அவரது நண்பர்களும் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதி பெற்ற மதுக்கூடங்களை நடத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. 21 வயதுக்கு உட்பட்டவர்களை மதுக்கூடத்தில் அனுமதிக்க கூடாது.
குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மதுபான கூடம் இயங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், 4 வயது சிறுவனை எப்படி மது கூடத்துக்குள் அனுமதித்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஓட்டலுக்கு அழைத்து செல்வதை போல மிக சாதாரணமாக தனது மகனை மது கூடத்துக்கு அழைத்து சென்று பக்கத்தில் அமர வைத்தபடி மது அருந்தும் தந்தையின் பொறுப்பற்ற செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மதுபான கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இனி வரும் காலங்களில் மதுபான கூடங்கள் உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post நண்பர்களுடன் மது அருந்தும் தந்தை வீடியோ வைரலாகி அதிர்ச்சி 4 வயது மகனை பக்கத்தில் அமரவைத்து appeared first on Dinakaran.