பெண்ணிடம் 2 சவரன் பறித்து தப்பிய ஜட்டி கொள்ளையன் தடுத்தவர்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் வந்தவாசியில் 2 வீடுகளில் பூட்டு உடைப்பு

வந்தவாசி, மே 27: வந்தவாசியில் 2 வீடுகளில் பூட்டு உடைத்த ஜட்டி கொள்ளையன், பெண்ணிடம் 2 சவரன் பறித்து கொண்டு தடுக்க முயன்றவர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராம பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன்(50), ஓட்டல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி அலமேலு(45), தாய் பார்வதி(80) மற்றும் மகன், மகளுடன் மாடியில் தூங்கினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், அறையின் பூட்டையும் உடைக்க முயன்றுள்ளார். சத்தம் கேட்ட ரங்கநாதன் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அப்போது மட்டும் ஜட்டி அணிந்துகொண்டு, முகமூடி அணிந்திருந்த மர்மநபர் அங்கிருந்து பின்பக்க கதவு வழியாக தப்பிச்செல்ல முயன்றார். மேலும் தடுக்க முயன்ற ரங்கநாதனை சுவரில் இடித்ததுடன், கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் தாக்கிவிட்டு ஜட்டிகொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

தொடர்ந்து, 1 கி.மீ. தூரம் உள்ள புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பைக் மெக்கானிக் பிரபு(35) வீட்டுக்கு ஜட்டி கொள்ளையன் சென்றுள்ளான். பிரபுவின் மகள் சசிகலா(8) என்பவருக்கு பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அனைவரும் காற்று வசதிக்காக முன்பக்கம் உள்ள கிரில் கதவை பூட்டு போடாமல் உறங்கியுள்ளனர். திடீரென கண்விழித்த பிரபுவின் மனைவி ெஜயந்தி(32), மர்மநபர் ஜட்டியுடன் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் அனைவரும் கண்விழித்தனர்.

அப்போது அந்த கொள்ளையன், ‘என்னை தொட்டால் உங்களுடைய உயிர் இருக்காது’ என மிரட்டியபடி, பிரபுவின் மாமியார் ஜோதியம்மாள்(60) என்பவரின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும் தடுக்க சென்ற பிரபுவை கத்தியால் இடது கை மீது வெட்டிவிட்டு தப்பினான். இதுகுறித்து வந்தவாசி போலீசில் 2 பேரும் தனித்தனியாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்ெபக்டர் விசுவநாதன், எஸ்ஐக்கள் விநாயகமூர்த்தி, தணிகைவேல், பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், 2 வீடுகளில் கொள்ளையடித்த ஜட்டி திருடனை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையன் பூட்டு உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெண்ணிடம் 2 சவரன் பறித்து தப்பிய ஜட்டி கொள்ளையன் தடுத்தவர்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் வந்தவாசியில் 2 வீடுகளில் பூட்டு உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: