அனைத்து மாவட்டங்களிலும் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் போலீஸ் உயர் அதிகாரிகள் தகவல் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும்

ேவலூர், மே 26: குற்றவாளிகளை எளிதில் பிடிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு காவல்துறையானது திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றசம்பவங்களையும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சாராயம், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் மலைப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலமும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் காவல்துறை கையாள தொடங்கியுள்ளது.

அதன்படி சமீபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், சாட்டிலைட் வசதிகொண்ட நடமாடும் நவீன கண்காணிப்பு கேமரா வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில், பேஸ் ரெகக்னைஸ் சிஸ்டம், நம்பர் பிளேட் ஸ்கேனர், மாநில எல்லைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி அலுவலகத்தில் இருந்து மானிடர் செய்யும் வசதி, பேட்ரோல் மற்றும் இரவு ரோந்து செல்லும் போலீசாரை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்தல் போன்றவை அடங்கிய மாடர்ன் கண்ட்ரோல் ரூம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ரோந்து போலீசாரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், போலீசார் ரோந்து செல்லாமல் இருந்தால் எஸ்பி அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். இதனால் போலீசாரின் இரவு ரோந்து பணியும் தீவிரமடைந்துள்ளது. குற்றங்களை தடுக்க இந்த மாடர்ன் கண்ட்ரோல் ரூம், காவல்துறைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. ஏற்கனவே சென்னை போன்ற சில முக்கிய நகரங்களில் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மாடர்ன் கண்ட்ரோல் ரூம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திட்டமதிப்பீடுகள் தயார் செய்து, விரைவில் மாவட்டங்கள் தோறும் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் வசதி ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் குற்றங்களை எளிதில் கண்காணித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post அனைத்து மாவட்டங்களிலும் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் போலீஸ் உயர் அதிகாரிகள் தகவல் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும் appeared first on Dinakaran.

Related Stories: