₹2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யாறு அருகே விஜிலென்ஸ் அதிரடி மின் கம்பியை மாற்றி அமைக்க

செய்யாறு, மே 26: செய்யாறு அருகே மின் கம்பியை மாற்றி அமைக்க ₹2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(26), டிப்ளமோ பட்டதாரி. இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டு மனையில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் மின்சார கம்பி செல்வதால் அதனை மாற்றியமைக்க வெம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், உதவி மின் பொறியாளரிடம் கடந்த மாதம் மனு அளித்தார். அப்போது பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் அஜித்பிரசாத்(39), மின் கம்பியை மாற்றியமைக்க பணம் கட்ட வேண்டும் எனக்கூறி, ₹50 ஆயிரம் கேட்டுள்ளார்.

இதையடுத்து சில நாட்களில் ₹50 ஆயிரத்தை திரட்டிய சக்திவேல், உதவி மின் பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுத்துள்ளார். ஆனாலும் மின்கம்பியை மாற்றியமைக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதுகுறித்து சக்திவேல் தொடர்ந்து கேட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு ஏற்கனவே கொடுத்திருந்த ₹50 ஆயிரத்தில் இருந்து ₹39 ஆயிரத்தை சக்திவேலுவிடம் திருப்பி கொடுத்த உதவி மின்பொறியாளர் அஜித்பிரசாத், வங்கிக்கு சென்று மின்வாரியம் பெயரில் வரைவோலை(டிமாண்ட் டிராப்ட்) எடுத்து வரும்படி கூறியுள்ளார். அதன்படி சக்திவேல் வரைவோலையை வழங்கி உள்ளார். அப்போது அஜித்பிரசாத் மேலும் ₹2 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல், ‘நான் ஏற்கனவே கொடுத்த பணத்தில் மீதம் ₹11 ஆயிரம் இருக்கிறதே’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் பணம் கொடுக்க, மேலும் ₹2 ஆயிரம் தர வேண்டும் என அஜித்பிரசாத் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையில், சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மதியம் சக்திவேலுவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை அவர் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ்.வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி ஆகியோர் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அஜித்பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவரை திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். ₹2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ₹2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யாறு அருகே விஜிலென்ஸ் அதிரடி மின் கம்பியை மாற்றி அமைக்க appeared first on Dinakaran.

Related Stories: