ஓபிஎஸ்சுடன் சந்திப்பா? சசிகலா பதிலளிக்க மறுப்பு

நாகப்பட்டினம்: ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா என்ற கேள்விக்கு சசிகலா பதிலளிக்க மறுத்துவிட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சசிகலா நேற்று அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். அடுத்து என்னை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சந்திப்பதால் மாற்றம் ஏற்படுமா என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில்தான் பார்க்க வேண்டும். எல்லா கட்சிகாரர்களும் என்னை சந்திக்கலாம் என ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக, அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி என அவரை சார்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியுள்ளேன். இதனால் காலம் கடந்து செல்வதாக சிலர் நினைக்கின்றனர். இது தவறு.

கட்சிக்காரர்கள் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே தலைவனாக முடியும். இதை வருங்காலத்தில் நீங்கள் உணருவீர்கள். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா?, அதிமுக மூன்று அணியாக செயல்படுமா என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எல்லோரையும் ஒன்றாக இணைத்து செல்ல வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறேன். உண்மையான அதிமுக நாங்கள் தான். வரும் தேர்தலுக்குள் நாங்கள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓபிஎஸ்சுடன் சந்திப்பா? சசிகலா பதிலளிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: