ஹாக்கி புரோ லீக் தொடர்: பெல்ஜியம் – இந்தியா மோதல்

லண்டன்: ஹாக்கி புரோ லீக் தொடரில், லண்டனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் – இந்தியா அணிகள் மோதுகின்றன. 2022, அக்.28ல் தொடங்கிய நடப்பு தொடரில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரிட்டன், இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின் என 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா அணிகள் தலா 12 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியம், நெதர்லாந்து தலா 4 ஆட்டங்களில்தான் விளையாடி உள்ளன. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் தலா 8 ஆட்டங்களில் ஆடி உள்ளன.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்த சுற்று ஆட்டங்கள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. லண்டனில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் – இந்தியா மோதுகின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது இந்தியா. அதன் பிறகு நெதர்லாந்து, மீண்டும் பெல்ஜியம், அர்ஜென்டினா அணிகளுடன் இந்தியா விளையாட வேண்டி உள்ளது. இத்தொடர் ஜூலை 5ம் தேதியுடன் முடிகிறது.

நேருக்கு நேர்: இந்தியா – பெல்ஜியம் 87 சர்வதேச ஆட்டங்களில் மோதியுள்ளதில் இந்தியா 50, பெல்ஜியம் 22ல் வென்றுள்ளன. எஞ்சிய 15 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. புரோ லீக் தொடரில்: இந்த 2 அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்ய, ஒரு ஆட்டம் டிராவானது.

The post ஹாக்கி புரோ லீக் தொடர்: பெல்ஜியம் – இந்தியா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: