முதல்வரின் அறிவிப்பின்படி காரைக்குடியில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்

*அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ மாங்குடி நன்றி

காரைக்குடி : காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல்வரின் அறிவிப்பின்படி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ள மினி ஸ்டேடியத்திற்கு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக எம்எல்ஏ மாங்குடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி மற்றும் நானும் நேரடியாக சந்தித்து இப்பகுதியில் சட்ட கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சட்டக்கல்லூரியும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிநாடு பகுதியில் வேளாண் கல்லூரியும் துவங்க உத்தரவிட்டு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையும் துவங்கியுள்ளது. இதற்காக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளைஞர்களின் நலன் கருத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி காரைக்குடி தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டமன்ற தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து சட்டமன்ற கூட்ட தொடரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் தாயுள்ளத்தோடு உடனடியாக நிறைவேற்றி தருகிறார்.

முதல்வரின் அறிவிப்புகளால் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் தொகுதிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது.பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி, மின்குறைபாட்டை போக்க டிரான்ஸ்பார்மர் வசதி செய்யப்பட்டு வருகிறது. சாலையே இல்லாத பல்வேறு கிராமங்களுக்கு தற்போது சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது.

தவிர முதல்வரின் தீர்க்கப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கையில், இச்சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதில் தேவகோட்டை நகராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்ற அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். காரைக்குடியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். கண்டனூர் கதர் வளாகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையை புனரமைத்து புதிய தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கை மனுவை முதல்வருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.

The post முதல்வரின் அறிவிப்பின்படி காரைக்குடியில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் appeared first on Dinakaran.

Related Stories: